Face Upward - Widget

முதியவரை பார்க்க வந்த மகன் - கண்களை கலங்க வைக்கும் உண்மை சம்பவம்!

Loading...
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வந்தார்.

``சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’

கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். வலி நிவாரணி மாத்திரைகள், மயக்க மருந்துகள் அதிக அளவில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், கண்களையே மெதுவாகத்தான் அவரால் திறக்க முடிந்தது. நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 22 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை `யூத் மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், ஓரளவிற்கு பேசக்கூடிய நிலையில் இருந்தபோது நர்ஸிடம் தன் மகன் பெயரைச்சொல்லி `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லி இருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்தாள்.

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சை யோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டார். நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடைய கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்... `தம்பி... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’

`வேண்டாம் பரவாயில்லை’ என்று சொல்லி விட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காஃபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது.

விடிந்தது. கிழவர் இறந்துபோயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான்.

`ரொம்ப சாரி தம்பி... உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றார் அந்த நர்ஸ்.

`நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’

`அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லி இருக்கலாமே.. ஏன் சொல்லலை?’’

நீங்க என்னை சந்திக்கறப்பவே ஒருவித பதட்டத்தோட இருந்தீங்க. அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை உடனே என்னோட புறப்பட்டு மருத்துவமனைக்கு வாங்கன்னு சொன்னப்போ, நானும் அதே படபடப்போடும் வேறு எந்த யோசனையும் தோன்றாமல் மருத்துவமனைக்கு வந்துட்டேன்.

`நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங் கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சுது. அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுன்னு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.’’

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான். பிரதிபலன் எதிர்பாராமல், அன்பையும் பரிவையும் காட்டும் வணக்கத்துக்குரிய மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அடையாளம் காட்டும் சம்பவம் இது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.