Face Upward - Widget

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் கொலை

Loading...

கோவை அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமியாரை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டார்.


கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கநாயகி(வயது 60). இவரது கணவர் இறந்து விட்டார். ரங்கநாயகிக்கு 2 மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.


ரங்கநாயகிக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வாடகையில் வாழ்ந்து வந்தார்.


ரங்கநாயகி வீட்டின் அருகே அவரது மகன் பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மபிரியா(30). இவர்களுக்கு அபிஷேக்(13), ஹரிகரசுதன்(9) என்ற 2 மகன்கள் உள்ளனர்.


பத்மபிரியா கோவை காந்திபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கருணாகரன். ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பத்மபிரியா-கருணாகரன் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.


பாலசுப்பிரமணியனுக்கு டிரைவர் வேலை என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இது பத்மபிரியுவுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. கணவர் வெளியில் செல்லும் நேரம் பார்த்து கருணாகரனை வீட்டுக்கு அழைத்து இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.


தனது மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஆண் வந்து செல்வது ரங்கநாயகிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி பத்மபிரியாவிடம் கேட்ட போது என்னுடன் வேலைபார்ப்பவர் என்று கூறி சமாளித்தார். இருப்பினும் மருமகளின் நடத்தையில் ரங்கநாயகிக்கு இருந்த சந்தேகம் அகலவில்லை.


‘எனது மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் மற்றொரு ஆண் வீட்டுக்கு வந்து சென்றால் மற்றவர்கள் வேறு மாதிரி பேசுவார்கள். ஒழுக்கமாக வாழும் வழியைப்பார்’ என்று எச்சரித்தார் இது பத்மபிரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மாமியார் இருக்கும் வரை கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாது. இதற்கு ஒரே வழி அவரை தீர்த்துக்கட்டுவது தான் என்ற முடிவுக்கு வந்தார்.


தனது யோசனையை கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவித்தார். இருவரும் அதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.


கூலிப்படையை ஏவி ரங்கநாயகியின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தனர். அதன்படி கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை நாடினர். அவர்களிடம் ரங்கநாயகியை தீர்த்துக்கட்டவேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் ரூ.3 லட்சம் தந்தால் வேலையை கனகச்சிதமாக செய்து முடித்து விடுகிறோம் என்றனர். பத்மபிரியாவும், அவளது கள்ளக்காதலனும் சம்மதம் தெரிவித்தனர்.


கூலிப்படையிடம் தனது மாமியாரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவர்களும் சரி என்றனர்.


இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் சபரிமலைக்கு சவாரிக்கு சென்றார். எப்படியும் அவர் வர சில நாட்கள் ஆகும். இடைப்பட்ட நாட்களில் மாமியாரை கொன்றுவிட வேண்டியதுதான் என்று களத்தில் இறங்கினார் பத்மபிரியா.


தனது சதி திட்டத்துக்கு வசதியாக மகன்கள் இருவரையும் தொப்பம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விட்டு விட்டார். அதன் பின்னர் கூலிப்படைக்கு தனது கள்ளக்காதலன் உதவியுடன் தகவல் தெரிவித்தார்.


சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் ரங்கநாயகி வீட்டுக்கு வந்தனர்.


கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரங்கநாயகியை கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தப்பிச்சென்று விட்டனர்.


இன்று காலை எதுவுமே தெரியாதது போல,‘எனது மாமியாரை காணவில்லை’ என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பத்மபிரியா கூறினார். அவர்கள் அக்கம் பக்கம் தேடினார்கள். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போதுதான் ரங்கநாயகி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.


இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் பறந்தது. உதவி கமிஷனர் முருகவேல், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ரங்கநாயகியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான ரேகைகைளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவைழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.


பத்மபிரியாவின் நடவடிக்கைகள் சந்தேகமளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது தான் அவர் கள்ளக்காதலுக்காக மாமியாரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. பத்மபிரியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


கள்ளக்காதலிக்காக மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.