Face Upward - Widget

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு | Central and Egmore railway stations in the 5-layer protection

Loading...


இன்று பாபர் மசூதி இடிப்பு தினம். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் பார்சல் அனுப்ப தடை விதிக்கவில்லை.


நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்றுமுதல் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அழகர்சாமி கூறியதாவது:-




சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள "மெட்டல் டிடக்டர்" கதவு (வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.


பயணிகள் உடைமைகளும் 'ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.


பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே காவல்துறையினர் 250 பேரும், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் யுவராஜ் கூறுகையில், "எழும்பூர் ரயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 60 பாதுகாப்பு படை காவல்துறையினர், ரயில்வே போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர்.


பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை(வெள்ளிக்கிழமை) பல்வேறு இயக்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து, நாளை கூடுதல் காவல்துறையினர் ரயில் நிலையங்களில் குவிக்கப்பட உள்ளனர்.


சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை போன்றே தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், அரக்கோணம் உள்பட புறநகர் மின்சார ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு கருதி பாபர் மசூதி இடிப்பு தினம் முந்தைய நாள், அடுத்த நாள் உள்பட 3 நாட்களுக்கு ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பயணிகள், வியாபாரிகள் வைத்த கோரிக்கையை அடுத்து, ரயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்படவில்லை.


இந்த ஆண்டும் ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் பிரிவு, பார்சல் ஏற்றப்படும் ரயில் பெட்டிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை முக்கிய பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.


இன்றுமுதல் (வியாழக்கிழமை) சோதனை செய்யப்படும் பயணிகள் உடமைகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.