விரைவில் பெட்ரோல் விலை குறைகிறது | Gasoline prices are dropping quickly
Loading...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசீலனை செய்து, சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப விலையில் மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்த போதிலும் நவம்பர் மத்தியில் பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
கடைசியாக அக்டோபர் 31ம் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. சென்னையில் வாட் வரியுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து விலை ரூ.74.22 ஆக மாறியது. எனினும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு உயர்த்தப்பட்டு ரூ.56.61 ஆக உயர்ந்தது. (டீசல் விலையில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டுவதற்காக மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்திக் கொள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதியில் இருந்து டீசல் விலை இதுவரையில் 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் விலையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. நவம்பர் மத்தியில் நுகர்வோருக்கு சலுகை எதையும் செய்யாததால், அடுத்த சில தினங்களில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.50 குறைக்கப்படலாம் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி சட்டப் பேரவைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் பெட்ரோல் விலை சிறிது குறைக்கப்படலாம். பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு தனது பரிந்துரையை எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.
Loading...