Face Upward - Widget

ஆதித்தமிழர் பேரவை மாநில மகளிரணி தலைவி தீக்குளிப்பு | Chairperson of the Council atittamilar makalirani immolation

Loading...


திருச்சியில் இன்று காலை சில கோரிக்கைகளை வைத்து ஆதித்தமிழர் பேரவையின் மாநில மகளிரணித் தலைவி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தீக்குளித்தார். அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரிஸ்டோ ரவுண்டானா. திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு பிரியும் பாதை அமைந்துள்ள இந்த பகுதியில் இன்று காலை வழக்கம்போல் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருந்தன. ரவுண்டானாவின் நடுவில் புல்வெளி தரையும், அதில் அம்பேத்கார் சிலையும் உள்ளது.


இந்த நிலையில் காலை 9.20 மணிக்கு ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சுடிதார் அணிந்த 41 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அங்குள்ள அம்பேத்கார் சிலை முன்பு தனது கையில் வைத்திருந்த மனுவை வைத்து வணங்கினார். பின்னர் நீலவேந்தனுக்கு (ஈரோட்டை சேர்ந்த ஆதித்தமிழர் பேரவையின் வக்கீல் பிரிவை சேர்ந்தவர், இவர் கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர்) வீர வணக்கம் என்று கோஷம் எழுப்பியவாறு உடைக்குள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றினார்.


பின்னர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார். உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டதால் மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. இளம்பெண் ஒருவர் உடலில் தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்த அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவந்தார். மேலும் காரில் இருந்த தலையணையை எடுத்து தீயை அணைக்க முயன்றார். அந்த வழியாக சென்ற அய்யப்ப பக்தர் ஒருவரும் தனது டவல் மற்றும் துணிகளை வைத்து தீயை அணைக்க முயன்றுள்ளார். இதில் தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் அந்த பெண்ணின் உடலில் உள்ள துணிகள் அனைத்தும் எரிந்து உடலும் வெந்துபோனது.


உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கும், கண்டோன்மெண்ட் போலீசாருக்கும் அங்கு நின்றவர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதை தொடர்ந்து கண்டோன்மெண்டு போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் பொன்மலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி ராணி என்ற பழனியம்மாள் (வயது 30) என்பதும், ஆதித்தமிழர் பேரவையின் மாநில மகளி ரணி தலைவியாக இருந்து வருவதும், திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.


தொடர்ந்து போலீசார் அவர் தீக்குளித்த இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு லெட்டர் பேடு கிடந்தது. அதில் அருந்ததியருக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்டம் காரியாப்பட்டியில் நடக்கும் ஜாதிக்கொடுமைக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தற்கொலைக்கு முயன்ற ராணிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆறுமுகம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.


சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டான்டில் நின்ற டிரைவர்கள் கூறுகையில், நேற்று மாலை இந்த பெண் இங்கு வந்து இந்த ரவுண்டானாவில் உள்ள விளக்குகள் அனைத்தும் சரியாக எரிகிறதா? என்று கேட்டார். அதற்கு நாங்கள் ஒரு சில விளக்குகள் மட்டும் எரியவில்லை என்று கூறினோம். உடனே இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.


இந்த நிலையில் இன்று காலை ஸ்கூட்டியில் வந்த அந்த பெண் கையில் வைத்திருந்த பேப்பரை அம்பேத்கார் முன்பு வைத்து வணங்கி விட்டு கோஷம் எழுப்பியவாறு பெட்ரோலை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த நாங்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் தீயை அணைத்தோம் என்றனர்.


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராணியிடம் திருச்சி ஜே.எம்.-6 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு திலீப் வாக்குமூலம் பெற்றார். அப்போது ராணி கூறுகையில், என் கோரிக்கைகள் அனைத்தையும் எனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் உள்ள லெட்டர் பேடு ஒன்றில் எழுதி வைத்துள்ளேன். திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் நடக்கும் ஜாதிக் கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அருந்ததியர்க்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறினார்.


இந்த சம்பவம் திருச்சியில் இன்று பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.