Face Upward - Widget

தகாத உறவு; கணவனை கொன்ற மனைவி; வாக்குமூலம் |Unfit Relationship, husband, killed By his wife; statement

Loading...



கூடுவாஞ்சேரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய தூண்டியதாக அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்தனர்.


இரு தினங்களுக்கு முன்பு, கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, பாண்டூர் துர்கா நகரில் உள்ள கிணறு ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண்பிரேதம் கை, கால்களை கட்டியும் முதுகு பகுதியில் பாறாங்கல் வைத்து கட்டியும் கிணற்றில் வீசப்பட்டிருந்தது. இது குறித்து கன்னிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.


காயரம்பேடு பகுதியைச் சேர்ந்த தயாளனை காணவில்லை என அவரது மனைவி காமாட்சி, அக்டோபர் 10-ஆம் தேதி, கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.


இந்நிலையில் பாண்டூர் துர்கா நகரில் உள்ள கிணற்றில் மீட்கப்பட்ட ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணமுடியாமல் இருந்தது.


இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.


இந்நிலையில் சனிக்கிழமை மாலை காரம்பேட்டைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் பூபதி (34), நந்திவரம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து தயாளனை கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் பூபதியை கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.


விசாரணை மேற்கொண்டதில் பூபதி கூறியது: "நானும், தயாளனும் நெருங்கிய நண்பர்கள். தயாளன் அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சியை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும், நண்பர் என்ற முறையில் அவர்களை சமாதானம் செய்து வைப்பேன். அதனால் அடிக்கடி தயாளன் வீட்டுக்குச் சென்று வந்தபோது கடந்த 2 ஆண்டுகளாக காமாட்சிக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இது தயாளனுக்கு தெரிந்ததால் என்னிடம் அடிக்கடி சண்டை போடுவார். இதனால் அவ்வபோது அவருக்கு மது வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி வந்தேன்.


மேலும் தயாளன் குடும்ப சொத்தைப் பிரிப்பது சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.


"சொத்தை தயாளன் அவரது சகோதரிக்கு விட்டு கொடுத்து விடுவார். நாம் அடிக்கடி சந்திப்பதிலும் சிக்கல் வந்துவிடும் என்பதால் தயாளனை கொன்று விடலாம்' என்று என்னிடம் காமாட்சி கூறினார்.


அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பூண்டூர் துர்கா நகர் அருகில் உள்ள கிணற்றின் அருகில் தயாளனை அழைத்துச் சென்று இருவரும் மது அருந்தினோம். அப்போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அவரை அடித்ததில் மயங்கியவுடன் கை, கால்களை கயிற்றால் கட்டி உடல் மேலே வராமல் இருக்க பாறாங்கல்லை முதுகில் கட்டி, கிணற்றில் போட்டுவிட்டு மறுநாள் இத்தகவலை காமாட்சியிடம் கூறினேன் என்றார் அவர்.


இதையடுத்து காமாட்சியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.