Face Upward - Widget

‘நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல உள்ளது’ : சிவாஜி சிலையை அகற்ற டைரக்டர்ஸ் யூனியன் எதிர்ப்பு

Loading...
சென்னை மெரினா பீச்சில் வைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் போக்குவரத்து காவல்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட டைரக்டர்ஸ் யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதே இடத்தில் வைக்குமாறும் போக்குவரத்து காவல்துறை ஆணையருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இது குறித்து டைரக்டர்ஸ் யூனியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் தமிழகத்தின் தவப்புதல்வன். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அரிய சாதனைகள் புரிந்தவர் என்பது உலகறியும்.

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனையும் வ .உ .சிதம்பரம் பிள்ளையையும் உலக மக்கள் கண்முன் நடமாட வைத்து விருதுகள் பல பெற்றவர்.

தமிழர் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும்.

அவரது திரு உருவச் சிலையை அங்கிருந்து அகற்றுவது நம் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றக்கூடாது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.