Face Upward - Widget

Anbudan Antharangam | அன்புடன் அந்தரங்கம் 13-10-13

Loading...

அம்மா அவர்களுக்கு—
நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்த, சகோதரியின் மகள். இப்போது, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நான். பெற்றோர் யாருமில்லை. கூடப்பிறந்தவர்கள் அனைவரும் தனித்தனியே சென்று விட, என்னுடைய தம்பி மட்டும், என்னுடன் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம். அவனுக்கு, நிரந்தர வேலையில்லை. சென்னையில் தற்காலிகமாக கிடைக்கும் வேலை பார்ப்பான். பின், ஊருக்கு வந்து விடுவான். இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சாதாரணமாக இருந்தது.
நான் பணியில் இருக்கும் நேரத்தில், என்னுடைய கம்பெனிக்கு போன் பண்ணி, நான் டூட்டியில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, ஊருக்கு வந்து போய்க் கொண்டு இருந்திருக்கிறான் என் தம்பி. என்னுடைய மனைவி, இதை, என்னிடம் சொன்னது இல்லை. பிள்ளைகள் கூறினர். ஆனாலும், நான், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 
ஆனால், ஒரு சமயம், பகல் பொழுதில், வேலை முடித்து வீடு திரும்பினேன். அப்போது, இருவரும் தனிமையில் இருப்பதை பார்க்க நேரிட்டது. அன்று மாலையே, அவன் சென்னைக்கு சென்று விட்டான். இதைப் பற்றி, நான், என் மனைவியிடம் கேட்கவில்லை. இனி என்னவென்று கேட்பது... எல்லாம் முடிந்து விட்டது.
இதற்கிடையில், அவனிடமிருந்த, "டிவி' டேப்ரெக்கார்டர் போன்றவற்றை கொடுத்தனுப்பினான். அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. இப்படியெல்லாம் நடந்தாலும், என்னுடைய சராசரி, கடமையிலிருந்து, நான் தவறவில்லை.
பிறகு, ஒரு சமயம், திருமணம் ஒன்றிற்காக சென்னை சென்றோம். அப்போது, அவனுடைய இடத்துக்கு சென்று தங்க வேண்டிய நிலைமை. அவன் தங்கியிருந்த இடம், ஒரே ஒரு அறைதான். நாங்கள், பிள்ளைகளும் அனைவரும் படுத்து விட்டோம். இடையில் விழிப்பு ஏற்பட்டு பார்க்கும் போது, இருவரையும் காணவில்லை. சிறிது நேரம் சென்ற பின், மொட்டை மாடியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து, நான் தூங்குவது போல் இருந்து விட்டேன். இப்படியாக, இவர்கள் உறவு போய் கொண்டு இருக்கிறது.
ஊருக்கு திரும்பிய பின், அவளிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள், "யாரிடம் போனேன். அவனும், என் மாமன்தானே...' என்று சொல்லி. "எப்படி இந்த, "டிவி' டேப்ரெக்கார்டர் எல்லாம் வந்தது. சும்மா வந்திடுமா... அவர் கொடுத்ததுக்கு, நான் திருப்பி தருகிறேன்...' என்பது மாதிரி, பேசுகிறாள். இது என்ன அரிசி கொடுத்து, பருப்பு வாங்குகிற கதையா மேடம். நீங்களே சொல்லுங்கள்... எடுத்துச் சொல்ல பெரியவர்கள் யாருமில்லை. வெளியே யாரிடமும் யோசனை கேட்க முடியவில்லை...
இப்போது, அக்கம்பக்கம் எல்லாம் தெரிந்து விட்டது. நாற்பது, ஐம்பது வீடுகள் உள்ள சிறிய கிராமத்தில், எவ்வளவு நாட்கள் மறைக்க முடியும். எல்லாருமே கேவலமாக பார்க்கின்றனர். அவளுடைய பிறந்த வீட்டுக்கும் தெரிந்து விட்டது. அவர்களும் வருவதில்லை. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஒரு சம்பவம் நடந்தது. அவனுடைய நண்பன் ஒருவனை, ஊருக்கு அழைத்து வந்திருக்கிறான். இரவு, என் வீட்டில் தங்கியிருக்கிறான். அப்போது, அவன் இருப்பதைப் பற்றி கூட கவலைப்படாமல், இந்த நாய்கள் இரண்டும் சல்லாபித்துக் கொண்டு இருந்திருக்கின்றன. அவன் பார்த்து, காறித் துப்பிவிட்டு, போய் விட்டான். போனவன், அவன் இருக்குமிடத்தில் போய், எல்லாரிடமும் பறைசாற்றி விட்டான். இப்போது, அங்கும், இவர்கள் மானம் கொடி கட்டி பறக்கிறது.
பெண்மையை, தாய்மையை போற்றக்கூடியது நம் கலாசாரம்; இந்த மாதிரி உறவுகளால் எப்படி கெடாமல் இருக்கும். இவ்வளவு நடந்தும், நான் உயிரோடு இருப்பதற்கு காரணம், என்னுடைய இரண்டு பிள்ளைகள். அப்படியே நான் போய் விட்டாலும் கூட, இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்தவா போகின்றன. இந்த உறவு நீடித்தால், பிள்ளைகள் பாடு என்னவாகும் என்று நினைத்து, நடைபிணமாக வாழ்கிறேன். ஆனால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு சகோதரியாய், உங்களிடம் எல்லாவற்றையும் கொட்டி விட்டேன். இந்த சகோதரன் வாழ்க்கை, நலம்பெற உங்கள் ஆலோசனையை கேட்கிறேன். எனக்கு ஒரு வழியை காட்டுங்கள்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள வாசகன்.

அன்பு சகோதரருக்கு—
உங்கள் கடிதம் பார்த்தேன். எந்தவொரு ஆணும், பெண்ணை மதிக்க வேண்டியதுதான்... ஆனால், அதற்காக, அவள் தவறான பாதையில் போகிறாள் என்பது தெரிந்தவுடன், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது தவறு.
உங்கள் மனைவி, உங்களுடைய அக்காள் மகள், உங்கள் தம்பிக்கும் அவள் முறைப் பெண்ணாக இருக்கலாம். ஆனால், தாலி கட்டி வந்த பின், கணவனின் தம்பி, தனக்கு மகன் போல என்பதை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவளுக்கு புரியாவிட்டால் அந்தக் கணமே, நீங்கள், உங்கள் அக்கா - தம்பி இருவரையுமே அழைத்து வைத்துப் பேசியிருக்க வேண்டும்.
சபல புத்திக்காரர்களை என்னதான் அடக்கி வைத்தாலும், அவர்கள், தங்களது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளத்தான் நினைப்பர். வள்ளுவர் சொன்னது போல - "சிறை காக்கும் காப்பு என்ன செய்ய முடியும்... மகளிர் நிறை காக்கும் காப்பே தலை...'
ஆனால், உங்கள் பக்கமும், சில தவறுகள் இருக்கின்றன. சில ஆண் பிள்ளைகள், ஒன்றுமில்லாத அல்ப விஷயத்துக்கு எல்லாம், பெண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு, தானும் நிம்மதியிழந்து, அவளையும் சித்ரவதை செய்வர்.
அதுபோல இருக்க வேண்டாம். எப்பொழுது உங்கள் மனைவி, நீங்கள் ஊரில் இல்லாதபோது, உங்கள் தம்பியுடன் முறை தவறி இருக்கிறாளோ - ஒன்று; உங்களது இந்த காடாறு மாதம், நாடாறு மாதம் பாணி உத்தியோக நேரத்தை, நீங்கள் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் அக்காவைக் கூப்பிட்டு, பதினைந்து நாட்கள், வீட்டோடு இருக்கச் செய்திருக்க வேண்டும். இதெல்லாம் போகட்டும்.
சென்னைக்கு, ஏதோ திருமண விஷயமாக போனபோது, தம்பியின் ஒற்றை அறையில், நீங்கள், உங்கள் மனைவியுடன் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதாக, எழுதியுள்ளீர்கள்.
வலுவில் போய், புற்றுக்குள் கையை விடுகிற மாதிரி, இந்த வாய்ப்பை, நீங்களே ஏன் ஏற்படுத்தித் தந்தீர்கள்? வேறு எங்காவது ஓட்டலிலோ அல்லது உறவினர் வீட்டிலோ தங்கியிருக்கக் கூடாதா? ஒருமுறை ஏமாந்தால் போகட்டும் எனலாம், பலமுறை ஏமாந்தால்...
போனது போகட்டும். உங்கள் மனைவியை அழைத்து, உங்கள் தம்பியையும் வைத்துக் கொண்டு இப்படி சொல்லுங்கள்:
இது, எனக்கு ரொம்பவும் தலைகுனிவா இருக்கு தம்பி. அவளை வச்சு இனிமே, என்னால நிம்மதியா இருக்க முடியாது. ஒருத்திக்கு, ஒரு சமயத்துல, ஒரு புருஷன் தான் இருக்க முடியும். அவளுக்கு உன் மேலத்தான் பிரியம்ன்னு தெரிஞ்சிட்டேன். பேசாம நீயும், அவளும் சேர்ந்து புருஷன், பெண்டாட்டியா இருங்க. இங்கே இருந்தா, ஊர் பேசும். உன் கூட பட்டணத்துக்கே அழைச்சிட்டு போ. அப்படியே நீ வாங்கிப் போட்ட சாமான் எல்லாத்தையும் தூக்கிட்டுப் போ. குழந்தைகளை அவ வச்சுக்க விரும்பினா வச்சுக்கட்டும். இல்லே... நான் பார்த்துக்கறேன். இனியும், இந்தப் போராட்டம் வேண்டாம்...
— இப்படி, "பளிச்'சென்று சொல்லுங்கள். குழந்தைகள் மீது, அவளுக்கு பாசமிருந்தால் அழைத்துப் போகட்டும். உங்கள் சகோதரன், அண்ணன் மனைவியை மட்டுமின்றி, அண்ணன் குழந்தைகளையும், தான் செய்த பாவத்துக்காக ஏற்றுக் கொள்வதானால் ஏற்றுக் கொள்ளட்டும்.
இல்லையா... குழந்தை களுடன் நீங்கள் பிரிந்து வாழுங்கள். உங்களது தன்மான உணர்வை மட்டுமின்றி - குழந்தைகளின் பிற்கால வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள். நீங்கள் கூடவே இருந்து, சம்பாதித்துப் போட்டு, குடும்பத்தையும் காப்பாற்றினால், உங்கள் மனைவிக்கும், உங்கள் தம்பிக்கும் இந்த நிழலின் அருமை புரியாது.
திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். விலகிப் போங்கள். அவர்கள் சந்தோஷமாய் வாழ்ந்தாலும் சரி... இல்லாவிட்டாலும் சரி... திரை மறைவில் திருட்டுத்தனம் எதற்கு. திரையைச் சுருட்டி வீசி எறியுங்கள். மாற்றான் மனைவியை, தன் மனைவியாக வரிக்கக் கூடிய தைரியம், உங்கள் தம்பிக்கு இருந்தால், நடக்கட்டும்; இல்லாவிட்டால், நாலு பேரறிய தலை குனியட்டும்.
உங்களுக்கு மட்டும் ஒன்று...
குட்டக் குட்டக் குனிவதற்குப் பெயர் பொறுமைசாலி இல்லை; ஏமாளி என்றுதான் சொல்வர்.
— அன்புடன்,
சகுந்தலா கோபிநாத்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.